தாய்லாந்து விஞ்ஞானிகள் 5.44 லட்சம் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, 'B(A)' என்ற மிக அரிய புதிய இரத்த வகையை மூன்று பேரிடம் கண்டறிந்துள்ளனர். இது உலகளாவிய இரத்தப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

தாய்லாந்தில் மனித இரத்தத்தின் இரகசியங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், உலகில் இதுவரை வெறும் மூன்று பேருக்கு மட்டுமே அரிதிலும் அரிதான ஒரு புதிய இரத்த வகை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பு இரத்த மாற்று சிகிச்சை மற்றும் பாதுகாப்பில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

5.44 லட்சம் மாதிரிகளில் ஆய்வு

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சிரிராஜ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், ஐந்து லட்சத்து நாற்பத்து நாலாயிரம் (5,44,000)-க்கும் மேற்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். இந்தச் சோதனைகளின் போது, பொதுவாகக் காணப்படும் 'A', 'B', 'O' ஆகிய இரத்தக் குழு அமைப்புகளில் ஏற்படும் சிறிய மாறுபாடுகளை அவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்தனர்.

அப்போது, தாங்கள் ஆய்வு செய்த நோயாளிகளில் 0.15 சதவீதத்தினரின் இரத்த மாதிரிகளிலும், இரத்த தானம் செய்தவர்களில் 0.03 சதவீதத்தினரின் இரத்த மாதிரிகளிலும் வித்தியாசங்கள் தென்பட்டன.

'B(A)' என்ற புதிய கலப்பு இரத்தம்

அந்த மாதிரிகளைத் தீவிரமாக ஆராய்ந்தபோது, ஒரு நோயாளி மற்றும் இரத்த தானம் செய்த இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேருக்கு மட்டுமே, 'B(A)' என்ற மிக அரிய இரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 'B' இரத்த வகையின் ஒரு கலப்பு வடிவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இரத்த வகைகள், இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஆன்டிஜென்கள்' எனப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. 'A', 'B' ஆன்டிஜென்கள் மற்றும் ஆர்.எச். காரணி ஆகியவற்றின் கலவையால், 'A', 'B', 'AB', 'O' என்ற குழுக்களும், 'நெகட்டிவ்', 'பாசிட்டிவ்' என்ற காரணிகளும் அடிப்படையில், இரத்த வகைகள் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

மரபணு மாற்றம் காரணம்

ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள 'B(A)' இரத்த வகை என்பது 'ABO' மரபணுவில் (Gene) ஏற்பட்டுள்ள மாற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த இரத்தத்தில் 'B' ஆன்டிஜென்களுடன், 'A' ஆன்டிஜென்களின் தன்மை சிறிதளவு கலந்திருந்ததால், பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த 'B(A)' இரத்த வகை தோராயமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம்‌ பேரில் ஒருவருக்குக் காணப்படும் ஒரு மரபணு வினோதம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு அழைப்பு

அரிய இரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு எளிதில் மாற்று இரத்தத்தை ஏற்ற முடியாது. இதனால் அவசரகாலத்தில் தகுந்த இரத்தம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்பு (WHO), இரத்தப் பரிசோதனை முறைகளை மேம்படுத்துவதுடன், உலகளவில் இரத்த தானம் செய்வோரின் தரவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.