கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதால், அரேபிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி அந்நாட்டுடனான தூதரக உறவை சவூதி அரேபியா, எகிப்து, மாலத்தீவு, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் முறித்துக்கொள்வதாக நேற்று அறிவித்தன.

இதையடுத்து, கத்தார் நாட்டில் பணிபுரியும் தங்களின் தூதர்களை அடுத்த 2 வாரங்களுக்குள் வௌியேற இந்த 4 நாடுகளும் உத்தரவிட்டுள்ளன.

ஏமனில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து உள்நாட்டு போரில் ஈரான் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் போரிட்டு வருகின்றன. ஆனால், கத்தார் அரசோ, கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்ததுமட்டுமின்றி, அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவித்து வந்தது.

மேலும், கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவைத் கண்டித்து நிதியுதவி அளிப்பதையும் அமெரிக்கா சமீபத்தில் தடை செய்தது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதத்துக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதைக் கண்டித்து, கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறிக்க சவூதிதலைமையிலான ஏமன், எகிப்து, மாலத்தீவு, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் முடிவு செய்துள்ளன.

சவூதி செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. மூலம் சவூதி அரண்மனை நிர்வாகம் இதை வௌியிட்டது. அந்த அறிவிப்பில், “ கத்தார் நாட்டுடனான தூதரக மற்றும் பாதுகாப்பு ரீதியான உறவுகளை நாங்கள் முறித்துக்கொண்டோம். தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து  எங்கள் நாட்டின் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதையடுத்து, நிலவழி, கடல்வழி மற்றும் வான்வழி எல்லைகள் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக கத்தார் அரசும், அதிகாரிகளும் பல்வேறு விதிமுறைமீறல்கள், எல்லை மீறல்களில் ஈடுபட்டதால்த இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரசு நாடுகளின் எத்தியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்வேஸ், பிளைதுபாய் ஆகிய விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை கத்தார் நாட்டுக்கு நிறுத்த உள்ளன. 

இதேபோல, ஐக்கிய அரபு நாடு மற்றும் எகிப்து ஆகியவையும் கத்தாருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளன. எகிப்து அரசு வௌியிட்ட அறிவிப்பில், “ எகிப்து நாட்டின் அனைத்து துறைமுகங்கள், விமானநிலையங்களில் கத்தார் கப்பல்கள், விமானங்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளது.

குட்டி நாடான பஹ்ரைனும், தனது நாட்டின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்ய கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

ஆனால், தூதரக உறவை முறிக்கும் இந்த திடீர் முடிவு நியமில்லாதது என கத்தார் அரசு தெரிவித்துள்ளது. தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆதரமில்லாத குற்றச்சாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என கத்தார் அரசு தெரிவித்துள்ளது.