கொரோனா வைரசுக்கு எதிராக இஸ்ரேலில் ஒரு சிறந்த தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி  நிறுவன இயக்குனருடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் சுமார்  200க்கும் அதிகமான நாடுகளை தாக்கியுள்ளது.  இதுவரை 1 கோடியே 92 லட்சத்து க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா,பிரேசில், இந்தியா, ரஷியா,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும், வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. ஒரு தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இதுவரை பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகத்திற்கு முதல் தடுப்பூசியை இஸ்ரேல் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில். அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தில் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிய அந்நாட்டின் ராணுவ அமைச்சர்  பென்னி காண்ட்ஸ்  தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  ஐஐபிஆர் எனப்படும் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி  நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான ஷபீராவை சந்தித்துப் பேசினார். 

இச்சந்திப்புக்கு பின்னர் ஷபீரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாகவும், அது குறிப்பிட்ட கால அட்டவணை முறையில் அதன் சோதனைகள் நடந்து வருவதாகவும், இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ்  இஸ்ரேலின் ஐஐடிஆர் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் சோதனை விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.