ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாற்றம்: விளாடிமர் புடின் அதிரடி!
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தனது பாதுகாப்புத்துறை அமைச்சரை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தனது பாதுகாப்புத்துறை அமைச்சரை மாற்றியுள்ளார். அதன்படி, 2012 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, உக்ரைன் போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதமரான ஆண்ட்ரே பெலோசோவை பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் விளாடிமர் புடின் நியமித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை க்ரெம்ளின் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக பதவியில் உள்ள நிகோலாய் பட்ருஷேவுக்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்கு அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு ராணுவ நடவடிக்கை என புடின் கூறும், 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உக்ரைன் மீதான போர் தொடங்கப்பட்டதில் இருந்து ராணுவ கட்டளையில் அவர் செய்த முக்கிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும்.
அதேசமயம், நாட்டின் மூத்த வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ அவரது பணியில் நீடிப்பார் என்று க்ரெம்ளின் தெரிவித்துள்ளது. போர்கள் மீதான அறிவை காட்டிலும், பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதமரான சிவிலியன் ஆண்ட்ரே பெலோசோவின் நியமனம் ஆச்சரியளிப்பதாக உள்ளாதாக கூறுகிறார்கள்.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: மேலும் ஒரு இந்தியரை கைது செய்த கனடா!
1980 களின் நடுப்பகுதியில் சோவியத் யூனியனைப் போன்ற ஒரு சூழ்நிலையை ரஷ்யா அணுகுவதால் இந்த மாற்றம் அர்த்தமுள்ளதாக இருப்பதாக க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த சமயத்தில் இராணுவம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அரசு செலவினத்தில் 7.4 சதவீதம் செலவிடப்பட்டது என தெரிவித்த அவர், நாட்டின் ஒட்டுமொத்த நலன்களுடன் இத்தகைய செலவினங்கள் சீரமைக்கப்படுவதை உறுதி செய்வது இன்றியமையாதது என்று கூறினார்.
அதனால்தான், பாதுகாப்பு அமைச்சக வேலையில் பொருளாதார பின்னணி கொண்ட ஒருவரை புடின் விரும்புவதாக தெரிகிறது. துணை பாதுகாப்பு அமைச்சர் லஞ்சம் பெற்றதாக அரசு வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, பாதுகாப்புச் செலவினங்களில் நிதி திறம்பட செலவிடப்படுவதை உறுதிசெய்யவும் புடின் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.