ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இந்தியரை கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரஜையான அவரது கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டு தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேரை கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? பிரதமர் மோடிக்கு முதல்வர் நவீன் பட்நாயக் சரமாரி கேள்வி!
கடந்த 2ஆம் தேதியன்று கரன் பிரார் (22), கமல்ப்ரீத் சிங் (22), கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று இந்தியர்களை கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்த நிலையில், 22 வயதான அமர்தீப் சிங் என்ற 4ஆவது இந்தியர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கும் இந்திய அரசுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்றார்.
