பொதுவாக எல்லோருக்கும் ஒரு தலைதான் இருக்கும். ரஷ்யாவை சேர்ந்த ஒருவருக்கு கழுத்தின் அருகே இரண்டாவது தலை போல ஏதோ வளர்ந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மனித உடல் ஒரு இயந்திரம் போன்றது. நாம் சாதாரணமாக ஒரு இயந்திரம் நன்றாக இயங்க எப்படி கவனம் அளிக்கிறோமோ, அப்படி நம் உடலுக்கும் கவனம் கொடுக்க வேண்டும். அப்படி பராமரிக்காவிட்டால் விளைவுகள் எப்படி மோசமாகும் என்பதற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் ஒருவர் உதாரணமாகியிருக்கிறார்.

இருதலைகளும் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒட்டிப் பிறந்த இரட்டையர்ககும் இருக்கிறார்கள். இங்கு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவருக்கு தலைக்கு பின் தலையை போலவே ஏதோ வளர்ந்துள்ளது.

இந்த ரஷ்ய மனிதரின் தலையின் பின்புறத்தில் கழுத்தை ஒட்டி ஏதோ வளர்ந்தது. இது எப்படி நடக்கும் என உங்களுக்கு யோசனை வரக் கூடும். மனித உடல் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய கழுத்தில் ஏதோ ஒன்று வளரத் தொடங்கி இருக்கிறது. அதை அவர் கவனிக்காமல் விடவே இப்போது மிகப் பெரியதாக வளர்ந்து அவரது தலையை போல மாறிவிட்டது. இப்போது மருத்துவர்கள் அதை சிரமத்திற்குப் பின் வெற்றிகரமாக அகற்றினர். உண்மையில் அந்த மனிதருக்கு ​​இரண்டாவது தலை எப்படி வந்தது? அது என்ன? என்பதை இங்கு காண்போம்.

இரண்டாம் தலையா?

ரஷ்யாவின் கிரோவ் நகரில் வசிக்கும் இந்த 65 வயதான நபர், தன் கழுத்தில் உருண்டையாக வளர்ந்த கட்டியை தானாகவே போய்விடும் என நினைத்திருக்கிறார். அவ்வப்போது மற்றவர்கள் சொல்லும் வீட்டு வைத்தியங்களை மட்டும் செய்திருக்கிறார். ஒருநாளும் இதற்காக மருத்துவரிடம் செல்லவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அந்த உருண்டையோடு நாட்கள் கடந்துவிட்டன. அந்தக் கட்டி தொடர்ந்து வளரவே இப்போது தலையில் சுமக்க முடியாத அளவுக்கு கனமாகிவிட்டது. வேறுவழியின்றி அவர் மருத்துவர்களிடம் சென்றார்.

லிபோமா என்றால் என்ன?

கிரோவ் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் இவரின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பரிசோதனையில் அவருக்கு வந்த கட்டி லிபோமா எனக் கண்டறிந்தனர். இது தோல், தசை அடுக்குக்கு இடையில் உருவாகக் கூடிய கொழுப்பு கட்டியாகும். இது பொதுவாக சிறியவை. மென்மையாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் வளர்ந்து ஆபத்தாகவே மாறிவிடும். இதற்கென மருந்தோ, மாத்திரையோ இல்லை. அறுவைசிகிச்சைதான் ஒரே வழியாம்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்த ரஷ்ய மனிதருக்கு வந்ததும் அப்படியொரு கட்டிதான். ஆனால் கழுத்தில் உள்ள முக்கியமான நரம்புகள், இரத்த நாளங்களுக்கு அருகில் வந்ததால் அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தது. சிகிச்சையில் சின்ன தவறு நடந்தாலும் மரணம் கூட ஏற்படலாம். பலமணி நேரம் மருத்துவர்களின் தீவிர போராட்டத்திற்கு பின் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நம் உடலில் இதுபோன்ற மாற்றங்கள் வந்தால் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கவேண்டும். வெறும் வீட்டு வைத்தியங்களை நம்பினால் மரணத்தை கூட சந்திக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.