ருமேனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஐயோனுட் மோஸ்டீயானு, தனது சுயவிவரக் குறிப்பில் (CV) கல்வித் தகுதி குறித்து தவறான தகவல் அளித்ததால் பதவி விலகியுள்ளார்.
கல்வித் தகுதி பற்றி தகவல் சுயவிவரக் குறிப்பில் (CV) தவறாகக் இடம்பெற்ற காரணத்தால், ருமேனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஐயோனுட் மோஸ்டீயானு (Ionut Mosteanu) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரஷ்யாவுடன் நாடு எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து கவனம் திசைதிரும்பாமல் இருப்பதற்கு தனது ராஜினாமா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.வி. குறித்த சர்ச்சை
அமைச்சர் மோஸ்டீயானு, தான் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக தனது சி.வி.யில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் உண்மையில் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் படிக்கவில்லை என்று ஊடக விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
இது குறித்து ஃபேஸ்புக்கில் விளக்கமளித்த அவர், "2016-ஆம் ஆண்டில் ஆன்லைனில் கிடைத்த ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி நான் விரைவாகத் தயாரித்த ஒரு சி.வி.யில், என்னை சங்கடப்படுத்தும் ஒரு தவறு உள்ளது. அப்போது நான் இந்த விவரங்களுக்கு அதிக கவனம் செலுத்தவில்லை" என்று கூறி மன்னிப்புக் கோரினார்.
இந்தப் பிரச்சினை விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, அவர் வெள்ளிக்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்தார்.
ரஷ்ய அச்சுறுத்தல் காரணம்
தற்போது ருமேனியாவும் ஐரோப்பாவும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், தனது ராஜினாமா நாட்டின் கவனத்தை திசைதிருப்பாமல் இருக்க உதவும் என்று மோஸ்டீயானு தெரிவித்தார்.
2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, ருமேனிய மண்ணில் மீண்டும் மீண்டும் ட்ரோன் பாகங்கள் விழுந்துள்ளன. மேலும், சமீபத்தில் செவ்வாயன்று, உக்ரைன் எல்லையோரம் உள்ள கிழக்கு ருமேனியாவில் ஒரு ட்ரோன் விழுந்தது.
இடைக்கால அமைச்சர்
மோஸ்டீயானு இந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய ஐரோப்பா ஆதரவு அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இடைக்காலப் பாதுகாப்பு அமைச்சராகப் பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராடு மிரூடா (Radu Miruta)-வை நியமிக்கவுள்ளதாக பிரதமர் இலி போல்யோஜான் தெரிவித்துள்ளார்.


