உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் ருமேனியா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் ருமேனியா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து 60% இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார். மீதமுள்ள 40% பேரில், ஏறக்குறைய பாதி பேர் கார்வ்வில் தாக்குதல் பகுதியில் உள்ளதாகவும் உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் 12,000 பேர் வெளியேறி விட்டனர் எனவும் உக்ரைனில் இருந்து தப்பிய சுமார் 1,700 இந்தியர்கள் போலந்து நாட்டில் உள்ளனர் என கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வர அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்திய விமானப்படையின் சி17 ரக விமானம் நாளை காலை 4 மணிக்கு ருமேனியா செல்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் ருமேனியா செல்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.