#UnmaskingChina: எல்லையில் சீனாவை விடாமல் மிரட்டும் இந்தியா..!! மோடி பாணியில் ராஜ்நாத் சிங்..!!
அது சர்வதேச அளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் சீனாவுக்கு வலுவான எச்சரிக்கையாக அமைந்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக லடாக் விரைந்துள்ளார். இன்று காலை ராணுவ சிறப்பு விமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதியை அடைந்தார். நாட்டின் பிரதமர் மோடி லேயில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய 15 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைக்கு பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா, எல்லை விவகாரத்தில் உறுதியாகவும், கவனமாகவும் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தியா-சீனா இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததால், இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன, இதனால் எப்போது வேண்டுமானாலும் இரு நாட்டுக்கும் இடையே போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது.
இந்த பதற்றங்களுக்கு இடையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஒரு கட்டத்தில் அதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையிலிருந்து படைகளை பின்வாங்க தொடங்கியுள்ளன. மேலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின் மூலம் இருநாடுகளும் முற்றிலுமாக படைகளை திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு மாதத்திற்கு மேலாக எல்லையில் நீடித்து வந்த பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக ஜூலை-3 தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தேதியில் யாரும் எதிர்பாரத வகையில் பிரதமர் மோடி எல்லைக்கு சென்றதுடன் அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் அவர் சீனாவின் நடவடிக்கைகளை எச்சரித்ததுடன், இந்தியா எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது எனவும் அறிவித்தார். அது சர்வதேச அளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் சீனாவுக்கு வலுவான எச்சரிக்கையாக அமைந்தது.
இந்நிலையில் சீனா படைகள் எல்லையில் இருந்து பின்வாங்குவதாக கூறியுள்ள நிலையில், எல்லை நிலைமைகளை நேரில் ஆராய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், மற்றும் தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே உள்ளிட்டோர் இன்று காலை ராணுவ தனி விமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றனர். லே பகுதிக்கு மேலே இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான இன்று இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார், அங்கு ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை அதாவது சீனாவுக்கு மிக நெருக்கமாக பகுதியில் பாரா கமாண்டோக்களின் வீரதீர செயல்களை ராஜ்நாத் சிங் நேரில் கண்டு பாராட்டினார். பின்னர் பாதுகாப்பு படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.