இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராகிறாரா தமிழர்..?
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னராக இந்தியாவை சேர்ந்தவரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான ரகுராம் ராஜன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த ரகுராம் ராஜன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் கவர்னரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. தற்போதைய கவர்னராக கனடா நாட்டை சேர்ந்த மார்க் கார்னே இருந்துவருகிறார். இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் முதல் அந்நிய நாட்டு கவர்னர் இவர் தான். அடுத்த ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவதால், அடுத்த கவர்னரை தேர்வு செய்யும் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன.
அடுத்த முறையும் அந்நிய நாட்டவரே கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மார்க் கார்னே தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ் குடும்பத்தை சேர்ந்த இந்தியரான ரகுராம் ராஜன், இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவரது பெயரை தீவிரமாக இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார வல்லுநர்களின் பெயர்களை பட்டியலிட்டு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் பரிசீலிக்கப்படும் பெயர்களில் ரகுராம் ராஜனே முன்னணியில் இருப்பதாகவும் அதனால் இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவர் நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.