பக்கிங்ஹாம் அரண்மனை வந்தடைந்த ராணி எலிசபெத் உடல்; செல்போன் டார்ச் அடித்து அஞ்சலி செலுத்திய மக்கள் வெள்ளம்!!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.
உடல் நலக்குறைவால் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஓக் மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணி எலிசபத்தின் உடலுக்கு அரச குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக ராணியின் உடல் வைக்கப்பட்டது. அலை அலையாக திரண்டு வந்த மக்கள் தங்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் ராணியின் உடல் நேற்றிரவு இங்கிலாந்து கொண்டுவரப்பட்டது. லண்டன் வந்த ராணி எலிசபெத்தின் உடலை மன்னர் சார்லஸ், மற்றும் ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் ராணி எலிசபத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுக அலைகடல் போல் திரண்ட மக்கள் தங்கள் செல்போன் டார்ச் லைட்டுகளை அடித்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வரும் 19ஆம் தேதி ராணியின் உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக ராணி எலிசபத்தின் உடல் வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள் கிழமை, 19ஆம் தேதி ராணியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் லண்டன் செல்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி... இங்கிலாந்தில் செப்.18 இரவு 8 மணிக்கு அனுசரிப்பு!!
எடின்பரிக்கில் இருந்து ராணியின் உடல் விமானத்தில் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்தை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். அதாவது. இந்த விமானத்தை லைவ்வாக 47 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்று பிளைட் கண்காணிப்பு இணையதளமான பிளைட்ரேடார் 24 தெரிவித்துள்ளது. மற்றவர்கள் யூ டியூப் சேனல் வழியாக பார்த்துள்ளனர். எடின்பர்க் விமான நிலையத்தில் போயிங் C17A குளோப்மாஸ்டர் விமானம் புறப்பட்டபோது, சுமார் 60 லட்சம் பார்த்துள்ளனர். பிளைட்ரேடார் 24 வரலாற்றிலேயே ராணியின் உடல் கொண்டு வந்த விமானத்தைத்தான் அதிகம் பேர் பார்த்து உள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநயாகர் நான்சி பெலோசி வந்த விமானத்தை 22 லட்சம் பேர் அதிகபட்சமாக பார்த்துள்ளனர் என்று பிளைட்ரேடார்24 தெரிவித்துள்ளது.