பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவத்திற்கு ழுமு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறுகையில்;- எந்த ஆதாரமும் இல்லாமல், பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது. காஷ்மீர் தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஆதாரம் வழங்கினால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.

 

நாங்களும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளோம். தேர்தலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பதற்கு யோசிக்கமாட்டோம். போரை ஆரம்பிப்பது எளிது. ஆனால், முடிவுக்கு கொண்டு வருவது கடினம். பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.