#UnmaskingChina:உங்கள் வீரத்தை கண்டு எதிரிகள் நடுங்குகிறார்கள்..!! ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி வீரவுரை..!!

உங்கள் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தனித்துவமானது. நீங்கள் அனைவரும் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த மிக உயர்ந்த பகுதிகளைவிட உங்கள் வீரம் பெரியது.

prime minister modi speech among army at lay

இந்திய  ஆயுதப்படைகள் உலகிலுள்ள அனைத்துப் படைகளையும் விட சக்தி வாய்ந்தவை மற்றும் மிகச் சிறந்தவை என்பதை மீண்டும் நமது ராணுவம் நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  பிரதமர் மோடி இன்று காலை திடீரென லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டதுடன், அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து எல்லைப் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார், பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  கடந்த மாதம் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்  சீனா உரிமை கொண்டாடும் இந்திய பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் சீன ராணுவமும் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்ற அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. 

prime minister modi speech among army at lay

இந்நிலையில் இன்று காலை திடீரென இந்திய பிரதமர் மோடி லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், தரை மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் இருக்கும் லே பகுதி உள்ள நீமுவுக்கு சென்ற பிரதமர் மோடி, இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்,  பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், தரைப்படை தளபதி எம்.எம் நரவானே  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி உற்சாகமூட்டும் வகையில் உரையாடினார்.  அப்போது அவர் பேசியதாவது:- நீங்கள் இப்போது தைரியத்தை காட்டியுள்ளீர்கள்,  அதனால் உங்களை நம்பிய இந்தியா  இப்போது மிகவும் வலிமையானதாக உணர்கிறது,  உங்கள் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தனித்துவமானது. நீங்கள் அனைவரும் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த மிக உயர்ந்த பகுதிகளைவிட உங்கள் வீரம் பெரியது. நம் எதிரிகள் உங்கள் வீரம் மற்றும் சீற்றம் இரண்டையும் பார்த்திருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தைரியத்தை கண்டு எதிரிகள் கலங்குகிறார்கள்,  நமது வீரர்களின் தைரியம் உலகளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. இந்தியா எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. உங்கள் கைகள் சுற்றியுள்ள மலைகளைப் போல வலுவானவை. 

prime minister modi speech among army at lay

உங்கள் நம்பிக்கை, உறுதிப்பாடு ஆகியவை மாற்ற முடியாதவை,  இந்திய ஆயுதப் படைகள் உலகில் உள்ள அனைத்துப்படைகளையும் விட சக்திவாய்ந்தவை மற்றும் சிறந்தவை என்பதை நீங்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் இங்கே செய்து காட்டியது வீரம் ஒட்டுமொத்த உலகத்தையும் சென்றடைந்திருக்கிறது. இன்று உலகிலுள்ள ஒவ்வொருவரும், இந்தியரும், இந்தியாவை மற்ற எல்லா நாடுகளையும் விட நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என நம்புகிறார்கள். உங்கள் அனைவருக்கும் மற்றும் தாய் நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். லடாக்கில் உள்ள ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு நதியிலும், இங்குள்ள ஒவ்வொரு கூழாங்கல்லிலும் இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அவர்கள் அறிவார்கள். உங்கள் வலிமை மீது இந்த நாடு நம்பிக்கை வைத்திருக்கிறது, நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்காமுடியாது. இந்திய நாட்டை காக்க உயிரிழந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios