தேச துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், கடந்த 1999-ம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், தனது பதவிக் காலத்தில் 2007-ம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்பு சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், தனக்கு எதிரான நீதிபதிகளையும், அரசியல் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், 2013-ல் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதியன்று பெஷாவர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், முஷாரப்புக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அமைலோடோசிஸ் என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக முஷாரப் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, துபாய் மருத்துவமனையில் இருந்து உருக்கமான வீடியோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் இக்கட்டான தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எதிரான தீர்ப்பில் முறையாக வாதிட எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது வருத்தம் தரக்கூடியது. 

மேலும், நீதிமன்றத்தின் இந்த முடிவு சந்தேகத்திற்குரியது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், வழக்கு விசாரணை முழுவதிலும் சட்டத்தின் மேலாதிக்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மேல் முறையீட்டில் நான் வெற்றி பெறுவேன் என மெல்லிய குரலில் உருக்கமாக பேசியுள்ளார்.