புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும் படி அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 

இதனால் இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக பிப்ரவரி 17-ம் தேதியே எல்லை பகுதியை ஒட்டிய தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் வேறு இடங்களுக்கு மாற்றியது. மேலும் 48 மணிநேரத்திற்குள் இந்திய எல்லையை விட்டு வெளியேற வேண்டும் பாகிஸ்தானியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிரடியாக கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எழுதியுள்ள கடிதத்தில் எந்த நேரமும் போர் துவங்கும் சூழல் உள்ளதால் தேவையான மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 25 சதவீதம் படுக்கை வசதிகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு, உள்ளூர் நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே வசிப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குடிமக்கள் யாரும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே தேவையில்லாமல் செல்ல அனுமதிக்கக்கூடாது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.