பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரயில் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 8 ஆண்கள் உள்பட 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.