பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரி அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்துக்கு இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 769 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மசோதா

ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யான டானா ரோஹ்ரா பாச்சர், குடியரசுக் கட்சி எம்.பி.யும், தீவிரவாதத்துக்கு எதிரான துணைக் குழுவின் தலைவருமான டெட் போ ஆகியோர் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில், கடந்தமாதம் 21-ந்தேதி தாக்கல் செய்தனர். ‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்’ என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

‘பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் தீவிரவாதத்தால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்த மசோதா மிகவும் முக்கியமானதாகும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கையெழுத்து இயக்கம்

மேலும், இந்த மனுவுக்கு ஆதரவாக, அமெரிக்க இந்தியர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 769 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்களின் அதிகபட்ச ஆதரவு பெற்ற முதல் கையெழுத்து இயக்கம் இதுவாகும். இந்த இயக்கத்துக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் ஏறக்குறைய 52 ஆயிரம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த ஒருவாரத்துக்குள் மட்டும் ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுநாள் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட மனுக்களில் அதிகபட்ச ஆதரவு பெற்ற மனு இதுவாகவே இருக்கும். வழக்கமாக ஒரு மனுவுக்கு ஆதரவாக ஒரு லட்சம் கையொப்பம் இருந்தாலே அதிபர் அலுவலகம் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது. அப்படியிருக்க இப்போது 6 லட்சத்துக்கு மேலாக ஆதரவு பெருகியுள்ளது. ஆனால், இன்னும் இந்த மனு குறித்து எந்த முடிவும் இன்னும் அரசு எடுக்க வில்லை.