ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுக்களின் தலைமை, நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான தகவல்களை இந்திய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்ற ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இதற்கிடையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுக்கள் குறித்து இந்திய உளவுத்துறை விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குத் தலைமை வகிப்பது யார்? அவற்றின் நிதி ஆதாரங்கள் என்னென்ன? இந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உளவுத்துறையின் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு

மௌலானா மசூத் அசார் - தலைவர்

முகமது ஹசன்- செய்தித் தொடர்பாளர்

மௌலானா காரி மசூத் அகமது - பிரச்சாரப் பிரிவுத் தலைவர்

முஃப்தி அஸ்கர் - முதன்மை தளபதி, செயல்பாடுகள்

இப்ராஹிம் ராதர் - மில்லி விவகாரங்கள் தலைவர்

மௌலானா சஜ்ஜாத் உஸ்மான் - நிதிப் பொறுப்பாளர்

சைஃபுல்லா ஷாகிர் - நஜிம் ஆர்.எம்.சி

மௌலானா முஃப்தி முகமது அஸ்கர் (சாத் பாபா) - தாக்குதல் தளபதி

இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் முகாம்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்படும் இடங்கள் குறித்த தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் தாக்குதல் தளபதி முக்கியப் பங்கு வகிக்கிறார். மௌலானா முஃப்தி முகமது அஸ்கர் (சாத் பாபா) ஜெய்ஷ்-இ-முகமதுவின் தாக்குதல் தளபதியாக உள்ளார். இவர் முன்னர் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு

ஹபீஸ் முகமது சையத்: தலைவர்

ஹபீஸ் சையத், தனது மகன் தல்ஹா சையத்திடம் படிப்படியாக தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து வருகிறார். தல்ஹா தற்போது அமைப்பின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஜகியுர் ரஹ்மான் லக்வி: செயல்பாட்டுத் தலைவர்

ஜகியுர் ரஹ்மான் லக்வி, லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாட்டுத் தலைவராக உள்ளார். 2008 மும்பை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி இவர்தான். தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இவர், 2015 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2021 இல் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சஜித் மிர் (சைஃபுல்லா சஜித் ஜாட்) - 2008 மும்பை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி. தலைமறைவாக உள்ள இவர், FBI-யின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார்.

முகமது யஹ்யா முஜாஹித் - லஷ்கர்-இ-தொய்பாவின் ஊடகப் பிரிவுத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்.

ஹாஜி முகமது அஷ்ரப் - லஷ்கர்-இ-தொய்பாவின் நிதிப் பொறுப்பாளர்.

ஆரிஃப் காஸ்மானி - வெளித் தொடர்புகளின் ஒருங்கிணைப்பாளர். அல்-கொய்தா உள்ளிட்ட பிற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பு இவருக்கு உள்ளது.

ஜாபர் இக்பால் - லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனர்.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் முகமூடிகள்

ஜமாத்-உத்-தாவா (JuD)- லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா இதை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

ஃபலஹ்-இ-இன்சானியத் அறக்கட்டளை (FIF), அல் மதீனா மற்றும் ஐசர் அறக்கட்டளை - JuD மீதான தடைகளைத் தவிர்ப்பதற்காக இந்தக் குழுக்கள் தொடங்கப்பட்டன. JuD முன்பு செய்த அதே செயல்பாடுகளை இவை தொடர்கின்றன.

மில்லி முஸ்லிம் லீக் (MML)- லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் பிரிவு. பாகிஸ்தானின் அரசியல் களத்தில் செல்வாக்கை அதிகரிக்க இது உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் MML மீது தடை விதித்துள்ளது. இதை லஷ்கரின் முகமூடி அமைப்பு என்று அறிவித்துள்ளது.