பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழலில், சிந்து நதி நீர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா நீரை நிறுத்தினால், பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நீரும் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு என்று பார்க்கலாம்.

சிந்து நதி நீர் எங்கே உற்பத்தி ஆகிறது?
இந்தியா பல நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் நீரும் பகிர்ந்து கொள்கிறது. ஆறுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பாய்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, திபெத்தில் கைலாஷ் மலைத்தொடருக்கு அருகிலுள்ள போகர் சூ என்ற பனிப்பாறையிலிருந்து சிந்து நதி உருவாகிறது. சித்தரின் பெயரில் இந்த பனிப்பாறை அழைக்கப்படுகிறது. இவர் சீனாவின் முக்கிய சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

சிந்து நதி நீர் எங்கெங்கு பாய்கிறது?


சிந்து நதி வடமேற்கு திசையில் லடாக் பகுதியில் நுழைந்து, பின்னர் ஜம்மு-காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் செல்கிறது. இறுதியாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நிலையில், நீர் எங்கிருந்து உருவாகிறதோ அல்லது எந்த நாட்டில் இருந்து செல்கிறதோ அந்த நாடு விரும்பினால் நீரை நிறுத்த முடியும். அதாவது, இந்தியா விரும்பினால், பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தலாம். 

இந்தியாவை சீனா மிரட்ட முடியுமா?
சீனாவும் இந்தியாவை இதுபோல் மிரட்ட முடியும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இதே போன்ற நிலைமை உள்ளது. சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை தற்காலிகமாக நிறுத்தி, பின்னர் எச்சரிக்கை இல்லாமல் அதை திறந்து விடலாம். இது பெரிய அளவில் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளஅபாயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் பிரம்மபுத்ரா நதி சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. அதேபோல், சிந்து நதியின் நீர் தற்காலிக நிறுத்திய பின்னர் இந்தியாவும் இதேபோல் செய்ய முடியும். இதற்குத் தான் பாகிஸ்தான் தற்போது அஞ்சிக் கொண்டு இருக்கிறது. 

சிந்து நதி நீர் அணுகுண்டு 
இப்போது சிந்து நதி நீர் என்னும் 'வெடிகுண்டு' பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் நீர்த்தேக்கங்களில் இருந்து திடீரென தண்ணீரை வெளியேற்றினால், கீழ் பகுதிகளில் வெள்ளம் மற்றும் அழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது அதிகாரபூர்வமான தகவலாக இல்லாவிட்டாலும், அப்படி நடந்தால், பாகிஸ்தானுக்கு ஆபத்து இருக்கிறது. ஆனால், இதுவரை இந்தியா அதுபோன்ற மனிதபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நதிகள் மூன்று என்று பிரிக்கப்பட்டது. கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின் நீர் ஆதாரம் முழுக்க இந்தியாவுக்கு சொந்தமானது. யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. மேற்கு நதிகளாக பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்படுகிறது. 

பாகிஸ்தான் உள்நாட்டு சிக்கல் என்ன?


இரண்டு நாடுகளுக்கும் இடையே, இக்கட்டான சூழல் எழுந்தபோதும், நதி நீர் எப்போதும் நிறுத்தப்படவில்லை. ஆனால், தற்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. 20 மில்லியன் பாகிஸ்தான் மக்கள் சிந்து நதி நீரை நம்பி இருக்கின்றனர். மேலும், 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பி இருக்கிறது. இப்படி பொருளாதார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அணுகுண்டை ஒரு நாட்டின் மீது வீசுவதை விட மோசமானது என்றே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் சிந்து நீரை வைத்து துணை கால்வாய்களும் அமைத்து வருகிறது. இதற்கும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்படி பாகிஸ்தான் பல்வேறு உள்நாட்டு சிக்கல்களை சந்தித்து வருகிறது.