புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடே காரணம் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் வெளியிட்டுள்ள பதிவில், ’இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள், எந்த விசாரணையும் நடத்தாமல் பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அண்டை நாட்டை குற்றம்சாட்ட இந்தியா காரணம் தேடுகிறது.

 


பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு குறித்த கேள்வி வந்து விடக் கூடாது என்பதற்காக இந்தியா காரணங்களை தேடி வருகிறது. புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல் விவகாரத்தில் பயங்கரவாதி வெளியிட்ட வீடியோவை சரி பார்க்காமல் இந்தியா ஏற்றுக் கொள்கிறது. 

 

ஆனால், இந்திய உளவாளியான குல்புஷன் ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் இந்தியா கொடுக்கட்டும். அது குறித்து எந்த விசாரணை நடத்தினாலும், நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.