பிரதமர் மோடியின் கருத்துக்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் தயார் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் இரு அண்டை நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, பாகிஸ்தான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சொன்னவற்றை மறுத்துள்ள பாகிஸ்தான், அவை ஒருதலைப்பட்சமானவை என்றும் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாட்காஸ்ட் பிரபலம் லெக்ஸ் ஃப்ரிட்மேன் மோடியுடன் நடந்திய உரையாடல் வெளியாகி வைரலாக்கப்பட்டது. அதில் மோடி கூறிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியின்போது விரோதத்தையும் துரோகத்தையும் தான் சந்தித்தோம்" என்ற மோடி, இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமைக்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஞானம் பிறக்கட்டும் என்றும் கூறினார்.

"இந்தக் கருத்துக்கள் தவறாக வழிநடத்துபவை, ஒருதலைப்பட்சமானவை" என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை இந்தியா வசதியாகப் புறக்கணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

2014ஆம் ஆண்டு தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் மோடி பாட்காஸ்ட் பேச்சில் கூறினார். "ஞானம் வந்ததும் அவர்கள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்," என்றும் மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் மக்கள்கூட அமைதியை விரும்புகிறார்கள என நம்புவதாகவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான், "மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் படுகொலை, நாசவேலை மற்றும் பயங்கரவாதச் செயல்களை ஏற்பாடு செய்வதில் தங்கள் சொந்த சாதனையைப் பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சர்ச்சை உட்பட, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆக்கபூர்வமான தீர்வு காண ஈடுபாட்டுடன் இருப்பதாவும் பயனுள்ள உரையாடலை பாகிஸ்தான் எப்போதும் ஆதரித்து வருகிறது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறையின் அறிக்கை கூறுகிறது. ஆனால், இந்தியாவின் கடுமையான அணுகுமுறையும் மேலாதிக்க அபிலாஷைகளும் தெற்காசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாதிக்கின்றன என்றும் குறைகூறியுள்ளது.