இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது போல பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். 


பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 6,000 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.  96 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாகிஸ்தானில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனவே நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று இம்ரான் கானிடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊரடங்கு குறித்த முடிவை நாங்கள் கடினமான சூழலில் எடுத்தோம். ஆனால், மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். இந்நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.  பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மார்க்கெட் பகுதிகள் உள்ளிட்டவை அடுத்த இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார். அதேநேரத்தில், ஏற்றுமதித் துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.