சந்திரயான்-3 வெற்றி: பொறாமையில் பொங்கும் பாகிஸ்தான்; வரவேற்கும் மக்கள்!
சந்திரயான்-3 வெற்றியால் பாகிஸ்தான் ஊடகங்கள் பொறாமையை கக்கி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சுமார் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சந்திரயான்-3-இன் வெற்றி இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல; மனிதகுலத்தின் வெற்றி என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார். இந்த வெற்றியால் உலக நாடுகள் இந்தியா மீதான தங்களது பார்வையை செலுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆனால், அண்டை நாடான பாகிஸ்தான் வழக்கம்போல் தங்களது வெறுப்பை காட்டி வருகிறது. அந்நாட்டு ஊடகங்கள் வன்மத்தை கக்கி வருகின்றன. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள், சந்திரயான்-3 வெற்றி மூலம் இந்தியா அடைந்துள்ள மைக்கல்லை வரவேற்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அந்நாட்டின் முன்னணி பத்திரிகையான Dawn தனது செய்தி இணையதளத்தில் ஒரு ஓரமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ளது. மற்ற செய்தித் தளங்கள் பெரிதாக இதனை கண்டுகொள்ளவில்லை. மேலும், சமூக ஊடகங்களிலும் இந்தியாவை ஏளனம் செய்யும் வகையில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய செயல் இந்தியா மீதான அவர்களின் பொறாமையை காட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், பாகிஸ்தானின் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. சந்திரயான்3 வெற்றிக்காக அந்நாட்டு மக்கள் இந்தியாவை பாராட்டு வருகின்றனர். இந்தியாவின் சாதனைகளை பாராட்டும் அவர்கள், பாகிஸ்தானின் குறைகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. “பாகிஸ்தானைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள், அதன் வளங்களைச் சாப்பிடுகிறார்கள்” என்று அந்நாட்டு முதியவர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிலவு பயணம் குறித்து பேசிய மற்றொருவர், “பாகிஸ்தானை விட இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. இங்கு நாங்கள் எங்களது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட பாடுபடுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, முன்னேற்றம் என்பது ஒரு தொலைதூர யோசனை. ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை; எங்களை விட இந்தியா ஒவ்வொரு துறையிலும் தொலைதூரம் வளர்ந்துள்ளது. இந்தியாவுடன் போட்டியிடும் அளவிற்கு நாங்கள் இல்லை.” என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!
“வளர்ச்சியில் இந்தியா நம்மை தோற்கடித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா பாகிஸ்தானுக்குப் பின்னால் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, இந்தியா நம்மை விட முன்னால் உள்ளது.” என பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். "நிலவில் மட்டுமல்ல, இந்தியாவின் விண்கலம் செவ்வாய் கிரகத்திலும் தரையிறங்கும்.” என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சந்திரயான்-2 வெற்றிகரமாக தரையிறங்கத் தவறியதால், இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, இன்று இந்தியாவை பாராட்டியுள்ளார். “சந்திரயான்3 நிலவில் தரையிறங்கியது இந்தியாவிற்கு சிறந்த தருணம். இந்த தருணத்தை இஸ்ரோ தலைவர் அவரது குழுவுடன் கொண்டாடுவதை நான் பார்க்கிறேன். கனவுகள் கொண்ட இளைய தலைமுறையால் மட்டுமே உலகை மாற்ற முடியும்.” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமாக, நேற்று காலை முதலே இந்தியாவை அவர் பாராட்டி வருகிறார். மேலும், சந்திரயான்3 தரையிறக்கத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் நேரலையில் காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.