இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!
இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தின் மூன்று நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்
நிலவில் இந்தியா கால் பதித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, உலகம் முழுவதும் இருந்து இஸ்ரோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி குறிப்பிட்டதை போல, சந்திரயான்-3 வெற்றியானது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான வெற்றி. இந்தியராக அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய இந்த வெற்றித் தருணத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக நாம் மேலும் பெருமிதம் கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கு காரணம், இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தின் மூன்று நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய பெருமை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களையே சாரும். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் சந்திரயான்-3 வெற்றியையடுத்து, அந்த வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று குறிப்பிட்டு பாராட்டினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேல் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரிய விஷயம். சந்திரயான் 3இன் திட்ட இயக்குநரும் இவர்தான். சுமார் 30 ஆண்டுகாலமாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளிலும், திட்டங்களிலும் பணிபுரிந்திருக்கும் வீரமுத்துவேல், கடந்த 2019ஆம் ஆண்டில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். 29 துணை இயக்குநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் பொறியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கியதுடன், அதன் வெற்றிகரமான தரையிறக்கத்துக்கும் வீரமுத்துவேல் ஆற்றிய பங்கு அளப்பரியது.
India'IS RO'cking: இஸ்ரோவுக்கு குவியும் பாராட்டுகள் - பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்!
அதேசமயம், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவனும் நினைவுகூரப்படுகிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கே.சிவன் இருந்தபோதுதான், சந்திரயான்2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. சிவனின் வழிகாட்டுதலின் கீழ்தான் சந்திரயான்2 திட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாகத்தான் சந்திரயான்-3 தனது நிலவு பயணத்தை மேற்கொண்டு வெற்றி அடைந்துள்ளது. எனவே, சந்திரயான்-2 முழுமையாக தோல்வி என சொல்லி விட முடியாது. ஏனெனில், சந்திரயான்-2 பயணத்தின் போது, விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதியது. இருப்பினும், சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் இன்னும் நிலவை சுற்று வருகிறது. அந்த ஆர்பிட்டரைத்தான், சந்திரயான்-3 மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் தொடர்பு கொண்டு தனது பயணத்தில் வெற்றியடையந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை பயின்றவர் என்பது கவனித்தக்கது.
முன்னதாக, சந்திரயான் 1,2 ஆகிய விண்கலத் திட்டங்களில் தமிழர்கள்தான் திட்ட இயக்குநராக செயல்பட்டு வந்தனர். சந்திரயான்-2இன் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் வனிதா முத்தையா. இஸ்ரோவின் நிலவை ஆராயும் சந்திரயான்-2 திட்டப் பணிக்கான இணை இயக்குநராக இருந்து திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்ற வனிதா முத்தையா சென்னையை சேர்ந்தவர். இஸ்ரோவின் திட்டப் பணிக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவர். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றவர் வனிதா முத்தையா.
அதேபோல், நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான, சந்திரயான்-1-இன் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை மாவட்டத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் தனது 36 ஆண்டுகால சேவையில், அதன் முக்கிய பணிகளான சந்திரயான்-1 மற்றும் மங்கள்யான் உட்பட சில முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். இவர், தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
மேலும், கடந்த 2013ஆம் ஆண்டில் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர், சுப்பையா அருணன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
சந்திரயான்-3 வெற்றிக்கிடையே, தமிழர்களின் இச்சாதனைகளை நினைவுகூர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் நிறைவை அளிக்கிறது. சந்திரயான் - 1, 2, 3 ஆகிய திட்டங்களை, முறையே மயில்சாமி அண்ணாதுரை, மு.வனிதா, ப.வீரமுத்துவேல் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சிறந்த அறிவியலாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும் திறமையும் நமக்கு எழுச்சியூட்டுகிறது. தமிழ்நாட்டின் இளந்திறமையாளர்கள் அனைவரும் இவர்களது வழித்தடத்தைப் பின்பற்றி, நம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று இஸ்ரோவில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தியவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளும் அதேவேளையில், அவர்களுள் பெரும்பாலானோர் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.