விண்ணை முட்டிய விலைவாசி உயர்வு... கண்ணீருடன் ரம்ஜானை கொண்டாடும் சாமானிய மக்கள்
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் பாகிஸ்தான் தொடர்ந்து பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்..
இந்நிலையில் பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.. சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் வெங்காயம் ஒரு கிலோ ரூ.335 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டிறைச்சி கிலோ 1400 முதல் 1800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சாமானியர்கள் ஒரு மாத ரமலான் நோன்பைக் கொண்டாடுவதற்கு வழக்கமான உணவுகளை வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
இதே போல் எரிவாயு, மின்சாரம், பெட்ரோல், மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் அரசாங்கம் மக்களின் அவலநிலையைக் கண்டுகொள்வதில்லை என்று பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் விமர்சித்துள்ளது.
தற்போது பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் 47 சதவீதமாக உள்ளது, இதனால் மக்கள் ரமலான் பண்டிகைக்காக புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை.. எனவே இந்த பண்டிகை நாட்களில் கூட சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இது மட்டுமின்றி, சமீபத்தில் பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் மின் கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கத்தின் அடிக்கடி அதிகரிப்பு ஆகியவற்றின் சுமைகளை மக்கள் தாங்க முடியாமல் வேதனையில் உள்ளனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் உணவுக்காக சிரமப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதனிடையே ரம்ஜான் காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையை குறைக்கும் முயற்சியில், மாகாண அரசாங்கங்கள் இலவச மாவு பைகளை விநியோகிக்கும் திட்டங்களை அறிவித்தன.
இருப்பினும், கைபர்-பக்துன்க்வாவின் சில பகுதிகளில் முறையான விநியோகம் இல்லாததால் நெரிசல் ஏற்பட்டது. சார்சடா என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். தெற்கு பஞ்சாபின் ஹசில்பூர் தாலுகாவில், இலவச மாவு விநியோகம் செய்யும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது ஐந்து பெண்கள் காயமடைந்தனர்.
Food Crisis : பாகிஸ்தானில் 10 கிலோ இலவச கோதுமை மாவிற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்! - 11பேர் பலி!