பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா உடனடி இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுவதால் பதற்றம் அதிகரிக்கிறது. கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கிறது.
இந்தியா அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் புதன்கிழமை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பதில் நடவடிக்கை எடுப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆயுதப் படைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதாக பிரதமர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு தண்டிப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். பூமியின் எந்த மூலைக்கும் சென்றாலும் அவர்களை விட்டுவைக்க மாட்டோம் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
பயங்கரவாதத்திற்கு பலியான பாகிஸ்தான்
இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பதிலளித்த பாகிஸ்தானின் மத்திய தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தாரர், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதைகளின் அடிப்படையில் இந்தியா ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
“பாகிஸ்தானே பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளது. அனைத்து வடிவங்களிலும் அதனை எப்போதும் கண்டித்துள்ளது” என்று தாரர் கூறினார். பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் வாய்ப்பைத் தவிர்த்து, மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
உலகளாவிய கவனத்தை வலியுறுத்திப் பேசிய தாரர், சர்வதேச சமூகம் நிலைமையை உற்றுநோக்க வேண்டும் என்றார். இந்திய எந்த வகையில் ராணுவ நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு உறுதியாக பதிலடி கொடுக்கப்படும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தியாதான் பொறுப்பு எனவும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவது, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்வது, அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடுவது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


