பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பதிலடி குறித்து விவாதிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நேரத்தில், திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரிலும் அதன் மேற்குப் பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மோடியிடம் ராஜ்நாத் விளக்கியதாகத் தெரிகிறது.
பிரதமருடன் முக்கிய ஆலோசனை:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்தியா பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற்றுள்ளது. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு போன்ற பெரிய நடவடிக்கைகளையும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங் - நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. முப்படைகளின் தளபதியான அனில் சவுகானும் பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி:
கடந்த வாரம், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 அப்பாவி மக்களைக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தாங்கள் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியது.
2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றது. அப்போது உடனடியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பதிலடி கொடுத்தது. அதுபோன்ற நேரடித் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் தங்களுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று சாதிப்பதாகக் கூறப்படுகிறது.
