லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டுகள் சிறை… பாக். நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
மும்பை 26/11 தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பை 26/11 தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்கள அமைப்பாகக் கருதப்பட்ட ஜமாத்-உத்-தாவாவின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹபீஸ் சயீத் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்கள அமைப்பாகக் கருதப்பட்ட ஜமாத்-உத்-தாவாவின் அமைப்பாளர் மற்றும் தலைவர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் மும்பையில் 10 பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். இந்த மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதை அடுத்து ஹபீஸ் சயீத் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அவரை உலகளாவிய பயங்கரவாதி என்று தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எண் 1267ன் படி 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜமாத்-உத்-தாவாவை ஒரு தீவிரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. மேலும் ஹபீஸ் சயீத் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு மும்பையில் 161 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க அரசு, ஹபீஸ் சயீத் குறித்த தகவலுக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவித்தது. ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டது.
இதனால், தலைமறைவான ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிப்பு வழக்குக்காகக் கைது செய்து, லாகூர் கோத் லாக்பேட் சிறையில் அடைத்தது. இந்த இரு வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், சயீத்துக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.