ஈரான் இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 100 பேர் பலி!
ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
2020ஆம் ஆண்டில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் ஈரானில் நடைபெற்ற விழாவின்போது நடந்த பயங்கரவாத இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் அதிகாரபூர்வ தொலைகாட்சி அளிக்கும் தகவலின்பனி,
தென்கிழக்கு நகரமான கெர்மனில் உள்ள சுலைமானியின் கல்லறை உள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது குண்டுவெடிப்பு நடந்துள்ளது. சுலைமானியின் மரணத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் கூடியிருந்த விழாவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக சில ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முதல் கட்டத் தகவல்களின்படி, 73 பேர் கொல்லப்பட்டதாகவும் 170 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் செய்தித் தொடர்பாளர் பாபக் யெக்டபராஸ்ட் கூறியுள்ளார். குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஈரானிய ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோக்களில் பலர் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து அலறி அடித்து ஓடுவதையும், பல உடல்கள் சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.
2020ஆம் ஆண்டு பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.
டோக்கியோ விமான விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 379 பயணிகள்! மற்றொரு விமானத்தில் சிக்கிய 5 பேர் பலி!