ஆபரேஷன் காவேரி: முதல்கட்டமாக 278 இந்தியர்களுடன் சூடானில் இருந்து புறப்பட்டது இந்திய போர்க்கப்பல்..
சூடானில் சிக்கி தவித்த இந்தியர்கள் 278 பேர் முதல்கட்டமாக, சூடானில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவ படையினர் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றினர். இதனால் அங்கு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இருதரப்பிரனரும் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் சூடான் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றி வருவதால் அங்கு தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூடானில் சிக்கி தவித்த இந்தியர்கள் 278 பேர் முதல்கட்டமாக, சூடானில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் போர்ட் சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” ஆபரேஷன் காவேரியின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் பேட்ச் சூடானில் இருந்து வெளியேறுகிறது. ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் 278 பேருடன் போர்ட் சூடான் புறப்பட்டு ஜித்தாவிற்கு செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓ... ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!!
சூடானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, மத்திய அரசு 'ஆபரேஷன் காவேரி'யை’ தொடங்கியது. அதன்படி ஜெட்டாவில் உள்ள இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு போக்குவரத்து விமானங்களையும், போர்ட் சூடானில் கடற்படைக் கப்பலான INS சுமேதாவையும் இந்தியா அனுப்பியுள்ளது.
சூடானில் உள்ள இந்திய தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 21 அன்று சூடானின் தரை நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சூடானிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான தற்செயல் திட்டங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை பிரதமர் மோடி வழங்கினார். தற்போது சூடான் நாட்டில் 3,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில் மத நல்லிணக்க அமைச்சகம் தேவையா?