கரூர் வழக்கில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே திமுக கச்சத்தீவு பற்றிப் பேசுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே திமுக அரசு கச்சத்தீவை தாரைவார்க்க அனுமதித்து என்றும் கூறினார்.

கரூர் வழக்கில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்புதற்காக திமுக திடீரென கச்சத்தீவு பற்றிப் பேசுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதை திமுக அனுமதித்தது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக மீதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கருணாநிதிக்குத் தெரியாது

"கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது, அப்போதைய முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி அவர்களுக்கே அது தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்க, அப்போதைய மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக அனுமதி அளித்தது." என அவர் சாடினார்.

"இன்று, தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்ப வேண்டிய தேவை திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே, இப்போது திடீரென்று கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி திமுகவினர் பேசி வருகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மோடியால் மட்டுமே முடியும்

திமுக அரசு தவெக கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்றும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பு என்றும் நயினார் குறிப்பிட்டார். தவெக ரவுண்டானாவில் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், குறுகலான வேறொரு இடத்தில் அனுமதி கொடுத்தது தவறு என்றும் குற்றம் சாட்டினார்.

கட்சித்தீவை மீட்பதற்கு பாரதப் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று கூறிய அவர், இது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை என்பதால் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் தேவை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.