- Home
- Tamil Nadu News
- எல்லாம் மறந்து போச்சா முதல்வரே! ஸ்டாலின் உங்க கைகளில் 41 உயிர்களின் ரத்தக்கறை! போட்டு தாக்கும் நயினார்!
எல்லாம் மறந்து போச்சா முதல்வரே! ஸ்டாலின் உங்க கைகளில் 41 உயிர்களின் ரத்தக்கறை! போட்டு தாக்கும் நயினார்!
Nainar Nagendran, MK Stalin, பேரிடர் காலங்களில் உதவாத மத்திய அரசு, கரூர் விவகாரத்தில் மட்டும் விரைந்து செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜகவின் நயினார் நாகேந்திரன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணைக்குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீததாராமன்
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! மேடை ஏறியதும், “இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று எந்தவொரு அடிப்படையுமின்றி வாய்கூசாது பொய் கூறும் முன் சிறிது வரலாற்றுப் பக்கங்களையும் புரட்டிப் பார்க்கலாமே! கஜா புயல், மிக்ஜாம் புயலால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் தமிழகம் அவதியுற்ற போதும் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீததாராமன் அவர்கள் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா?
நயினார் நாகேந்திரன்
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ, போலி நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை.
முதல்வர் ஸ்டாலின் Vs நயினார்
ஒரே இரவில் கரூருக்கு விரைந்த நீங்கள், உங்கள் ஆட்சிப் பொறுப்பில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கள்ளக்குறிச்சிக்கும் வேங்கைவயலுக்கும் சிவகங்கைக்கும் இன்று வரை செல்லாதது ஏன்? அங்குள்ள மக்களின் கண்ணீரை விட கரூர் செல்வதனால் ஏற்படும் அரசியல் ஆதாயம் தான் தங்களுக்குப் பெரிதாகிவிட்டதல்லவா? ஓட்டுக்காக கரூரில் ஃபோட்டோஷூட் நாடகமாடும் திமுகவினருக்குக் கரூரில் மக்கள் துயரைப் போக்க விரைந்த மத்திய அரசைக் குறை கூற எந்தத் தகுதியும் இல்லை.
கரூர் சம்பவம்
எவ்வளவு போலிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், முன்னேற்பாடுகளும் முறையான திட்டமிடலும் இல்லாமல் கரூரில் 41 அப்பாவி உயிர்களைப் பலியிட்டதால் நேர்ந்த ரத்தக்கறை திமுக அரசின் கைகளில் இருந்து என்றும் அகலாது! மக்களை வதைத்து மீண்டும் ஆட்சி ஏறும் தங்கள் பகல் கனவும் என்றும் பலிக்காது என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.