அமெரிக்‍க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்‍ கட்சிக்‍கு வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதனை சீர்குலைக்‍கும் வகையில் அக்‍கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்களை விக்‍கிலீக்‍ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Julian Assange நிறுவியுள்ள விக்‍கிலீக்‍ஸ் இணையதளம், அமெரிக்‍கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ ரகசியங்களை ஏற்கெனவே அம்பலமாக்‍கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்‍க அதிபர் ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்களை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. bobama@ameritech.com என்ற இணையதள முகவரியில் இந்த ரகசிய மின்னஞ்சல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதள முகவரியில் 7 செய்திகள் இடம்பெற்றுள்ளதாக New York Post நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற உலக நிதி நெருக்‍கடி குறித்த G-20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அன்றைய அதிபர் ஜார்ஜ் W புஷ் விடுத்த அழைப்பை ஏற்றுக்‍கொள்ள வேண்டாம் என, அதே மாதம் 4-ம் தேதி ஒபாமாவுக்‍கு, அவருடைய அதிகாரி John Podesta மின்னஞ்சல் அனுப்பியிருந்ததாகவும், அதன்படி வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒபாமா கலந்துகொள்ள வில்லை என்றும் விக்‍கிலீக்‍ஸ் வெளியிட்ட ஒரு செய்தி தெரிவிக்‍கிறது.

ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார தலைவராக தற்போது செயல்படும் Podesta-விடம் இருந்து 23 ஆயிரம் மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதும், அவற்றில் ஒபாமா தொடர்பான மின்னஞ்சல்களும் அடங்கும் என்றும் New York Post தெரிவிக்‍கிறது. 

ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல் குறித்து கருத்து தெரிவிக்‍க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. ஜனநாயகக்‍ கட்சிக்‍கு வெற்றிவாய்ப்பு கூடியுள்ளதால், அதனை சீர்குலைக்‍க ரஷ்யா இதுபோன்ற Cyber தாக்‍குதல்களை மேற்கொண்டிருக்‍கலாம் என அமெரிக்‍க உளவுத்துறை கருதுகிறது. இந்நிலையில், ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்கள் மேலும் வெளியாகும் என விக்‍கிலீக்‍ஸ் தெரிவித்துள்ளது.