உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இதுவரை தனது நாட்டில்  ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவலாக ஏற்பட்டிருப்பதாகவும், ஆனாலும் அந்நாடு அதை முற்றிலுமாக மறைக்கிறது எனவும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரை 78 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 லட்சத்து 8 ஆயிரத்து 768 பேர் இதுவரை இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா,  ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. 

இங்கு மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. பல நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக போராடி வருகின்றன. உலகில் இரும்புத்திரை நாடு என வர்ணிக்கப்படும் வடகொரியா ஆரம்பம் முதல் தனது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என கூறி வருகிறது. யாரும் அவ்வளவு எளிதில் அந்த நாட்டுக்குள் நுழைந்து எந்தத் தகவலையும்  பெறமுடியாது, அந்நாட்டு அரசு தெரிவித்தால் ஒழிய அந்நாட்டின் தகவல்களும் வெளியில் கசியாது. இந்நிலையில்  வடகொரியாவில் கொரோனோ வைரஸ்  நிலவரம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதுவரை தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறியுள்ளார். வடகொரியா பொலிட்பீரோ கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதை தெரிவித்துள்ளார், மேலும் அந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்களில்  சமூக இடைவெளியை பின்பற்றி கிம் ஜாங் உன்னுக்கு அருகில் இருந்த நாற்காலிகள் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  முன்னதாக கிம் ஜாங் உன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக செய்திகள் வந்தன, பல்வேறு யூகங்களும் வெளியான நிலையில் அவர் பகிரங்கமாக வெளியே வந்து அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 

தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டு வருகிறது, அதில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. வடகொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அவர் கூறிவரும் நிலையில், அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்கள் அதற்கு எதிர்மறையாக  உள்ளது என வெளநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அவர் கலந்து கொண்ட பொலிட்பீரோ கூட்டத்தில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி குறித்து அவர் விவாதித்ததாகவும், நாட்டின்  பொருளாதாரத்தை தன்னிறைவு அடையச் செய்வது மற்றும் வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி அவர் உரையாற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரசாயன தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கு அவர் அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.