பாகிஸ்தானுக்கு எந்தவிதமான போர் விமானங்களையும் ரஷியா விற்பனை செய்ய வில்லை. அந்நாட்டுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி என்பது, தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சியாகும். இந்தியாவுக்கு எதிரானது அல்ல என ரஷியா விளக்கம் அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக பாகிஸ்தான் சென்ற ரஷிய ராணுவப் படையினர், அந்நாட்டு ராணுவத்தினருடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து கோவா “பிரிக்ஸ்” மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷிய ரோஸ்டெக் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜி செம்மசோவ்விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு எந்தவிதமான நவீன போர்மானங்கள், ராணுவத் தளவாடங்கள் ஏதும் விற்பனை செய்யவில்லை. ஆனால், நாங்கள் ஹெலிகாப்டர்கள் மட்டுமே விற்பனை செய்து இருக்கிறோம்.
அது, சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படக்கூடியது. அந்த ஒப்பந்தமும் முடிந்துவிட்டது.
ராணுவ ரீதியான எந்த தளவாடங்களும் விற்பனை செய்வது தொடர்பாக பாகிஸ்தானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் நாங்கள் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து கூட்டுப்பயிற்சி மேற்கொண்டது குறித்து கேட்ட போது, “ தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து ரஷிய ராணுவம் பயிற்சி மேற்கொண்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு என்பது சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் அமைப்பாகும். மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் அந்த அமைப்பினர் அச்சுறுத்தவில்லை.
ரஷியா, இந்தியா, பாகிஸ்தானுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.
ஆதலால், அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக நாங்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து பயிற்சி எடுத்தோம். மாறாக இது இந்தியாவுக்கு எதிரான கூட்டுப்பயிற்சி அல்ல” என்று அவர் தெரிவித்தார்.
