அங்கிருக்கிருக்கிறார்... இங்கிருக்கிறார்... எங்கிருக்கிறார் என அலசி ஆராய்ந்து வருகிறார்கள் நித்யானந்தாவுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும்... கைலாசா நாடு என கப்சா விட்டதும் நித்யானந்தா மூலமே குட்டுடைந்து விட்டது. பாதாள அறையில் பதுங்கி இருக்கிறா என்றும், கையாலத்தில் மறைந்து வாழ்கிறார் என்றும் ஆளாளுக்கு யூகங்களை கிளப்ப இப்போது அவரது பெண் சீடர்கள் மூலமே நித்யானந்தா இருக்கும் இடம் கிட்டத்தட்ட தெரிய வந்துள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர் நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா அகமதாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை மீட்டனர்.

ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார். அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சாலைமார்க்கமாக நேபாளம் சென்று அங்கிருந்து கரீபியன் தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறப்பட்டது.  இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால் சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி உள்ளனர்.

அவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில் உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள் என தெரிந்தது. ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால் அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார்கள்’என கூறினார்.

இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.