சொத்துக்களை உயில் எழுதி வைத்து விட்டு செத்துப்போன நித்யானந்தா... அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு..!
என்னுடைய உடலை கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். நான் மரணம் அடைந்துவிட்டால் என்னுடைய சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டேன்.
சாமியார் நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பல்வேறு விஷயங்களை தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் விடாமல் தேடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்கள் விசாரணைக்காக காத்துக் கிடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் வெளிநாட்டில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான குடியுரிமை அம்சங்கள் வரை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய நித்யானந்தா, வாடிகன் போன்று இந்து மதத்திற்கு என்று தனியான இடம் வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்காக 20 ஆண்டுகளாக உழைத்தேன். பல்வேறு விதமான தாக்குதல்களை எதிர்கொண்டேன். இருப்பினும் இதற்கான பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டேன். பல நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டன. காலம் வரும் போது எந்த இடத்தில் கைலாசா இருக்கிறது என்று கூறுவேன். இதைப் பற்றி வேறெந்த தகவல்களையும் தற்போது தெரிவிக்கப் போவதில்லை. கைலாசா இருக்கு அல்லது இல்லை என்று சொல்ல மாட்டேன்.
ஆனால், என்னுடைய பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்னுடைய உடலை கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். நான் மரணம் அடைந்துவிட்டால் என்னுடைய சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டேன்.
அதன்படி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும். தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டுக்கு இனிமேல் வரமாட்டேன். தமிழ்நாட்டு ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்ட நபருக்குத் தான் சமம்.
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கப் போகிறேன். என்னவொன்று தமிழ் பேசுவேன் அவ்வளவு தான். இதனுடன் தமிழ் ஊடகங்களுக்கும், எனக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன்’’எனக் கூறியிருக்கிறார்.