Asianet News TamilAsianet News Tamil

"சுவிஸ் வங்கியில் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு ஆப்பு..!!!" – அதிரடி நடவடிக்கையில் இறங்கியது மத்திய அரசு

next action-for-swiss-bank-account-holders
Author
First Published Nov 23, 2016, 3:53 PM IST


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொடுப்பதாக ‘சுவிஸ்’ அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கியவர்களுக்கு ஆப்பு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் மீட்கப்படும் என மோடிஅறிவித்தார்.

பிரதமராக பதவி ஏற்ற பின் கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து சென்ற மோடி, அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோநாதன் சினைடர் அம்மானை ஜெனீவா நகரில் சந்தித்து பேசினார். அதையடுத்து இரு தலைவர்களும் தங்களது நாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி தானாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் டெல்லியில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திராவும், இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து துணைத் தலைமை தூதரக அதிகாரி ஜில்லெஸ் ரூதுயித்தும் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வங்கி கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்களை தானாக பரிமாறி கொள்வது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் உலக அளவிலான வழிமுறைகளுக்கு இணங்கி செயல்பட சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டது. அதேபோல், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய ரகசியத்தை பாதுகாக்க இந்தியா உறுதி அளித்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் கூட்டு பிரகடனமாகவும் வெளியிடப்பட்டது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கூட்டு பிரகடனத்தின்படி இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ள நிதி ஆதாரங்கள் பற்றி அந்நாட்டு அரசாங்கம், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகவல்களை அளிக்கத் தொடங்கும். 2018ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை தானாகவே இந்தியாவுடன் சுவிட்சர்லாந்து அரசு பரிமாறிக் கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2018ம் ஆண்டுக்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அண்மையில் மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து அரசுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் காரணமாக இனி கருப்பு பணத்தை பதுக்கும் நோக்கத்துடன் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசு எடுத்துள்ள இன்னொரு கடும் நடவடிக்கையாகவும் இது அமைந்து இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios