- Home
- உலகம்
- விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!
விண்வெளிப் பயணத்தின்போது நுண் ஈர்ப்பு விசை மாதவிடாயை பாதிப்பதால், விண்வெளி வீராங்கனைகளின் ஆரோக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சவாலை சமாளிக்க, மறுபயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.

விண்வெளியில் மாதவிடாய்
விண்வெளியில் மாதவிடாய் என்பது நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆனால், இப்போது அதிகமான பெண்கள் விண்வெளிக்குப் பயணம் செய்வதுடன், பயணங்களின் கால அளவு நீடிப்பதால், விண்வெளி வீராங்கனைகளின் ஆரோக்கியம் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாக உள்ளது.
விண்வெளிப் பயணம் மனித உடலின் செயல்பாட்டை மாற்றியமைக்கிறது. நுண் ஈர்ப்பு (Microgravity) இரத்த ஓட்டம், திரவ இயக்கம், எலும்பு அடர்த்தி, தசை வலிமை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றை பாதிக்கிறது. இந்த உடலியல் மாற்றங்கள், பூமியில் நடக்கும் அன்றாட உயிரியல் செயல்முறைகளான மாதவிடாயையும் வித்தியாசமாக உணரச் செய்கின்றன.
சுகாதாரம் தான் சிக்கல்
வரலாற்று ரீதியாக, விண்வெளிப் பயணம் ஆண்களை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதனால், விண்கல அமைப்புகளில் பெண்களின் மாதவிடாய் நாட்களுக்கான வசதிகள் பற்றி அரிதாகவே விவாதிக்கப்பட்டது. ஆனால், அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்க, விண்வெளியில் மாதவிடாய் நாட்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது இப்போது பேசுபொருளாகியுள்ளது.
நாசா ஆதரவு பெற்ற ஆராய்ச்சி அறிக்கை ஒன்றின்படி, விண்வெளியில் நிலவும் நுண் ஈர்ப்புவிசையில் (Microgravity) மாதவிடாய் சாதாரணமாகவே செயல்படுகிறது. எனவே, முக்கிய சவால் உடலியல் மாற்றம் அல்ல. மாறாக சுகாதாரம் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், விண்கலத்தைச் செலுத்தும்போது ஏற்படும் அழுத்தங்கள், ஏற்ற இறக்கங்கள், குறைவான நீர் பயன்பாடு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கழிவுகளை அகற்றுதல் போன்ற சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
மறுபயன்பாட்டுப் பொருட்கள்
விண்வெளியில் மாதவிடாய் நாட்களைச் சமாளிப்பது சவாலாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
முதன்முதலில் பெண்கள் விண்வெளித் திட்டங்களில் இணைந்தபோது, ஈர்ப்பு விசை இல்லாமல் மாதவிடாய் இரத்தம் உடலை விட்டு வெளியேறுமா என்பது குறித்து சந்தேகம் இருந்தது. நாப்கின்கள் அல்லது டம்பான்கள் எவ்வாறு செயல்படும், கழிவுகளைச் சுத்தப்படுத்துவது எப்படி என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது.
சிக்கல்களைத் தவிர்க்க, பல விண்வெளி வீரர்கள் தொடர்ந்து ஹார்மோன் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி மாதவிடாயை நிறுத்தி வைத்தனர். இது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவு. அனைவருக்கும் ஏற்றதல்ல.
விண்கலங்களில் குறைவான இடவசதி இருப்பதால், உயிரி-கழிவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால், நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்காக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளைத் (Reusable Menstrual Products) சோதிப்பதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மென்சுரல் கப் சோதனை
நாசா மற்றும் பிற ஆய்வு அமைப்புகள், நீண்ட பயணங்களுக்கு மென்சுரல் கப்களைக் (Menstrual Cups) பயன்படுத்துவது குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபயன்பாட்டுக்குரிய மென்சுரல் கப், பல மாதங்களுக்குத் தேவையான டம்பான்கள் அல்லது நாப்கின்களை விடக் மிகக் குறைந்த கழிவுகளையே உருவாக்குகிறது.
இந்த மென்சுரல் கப்கள் மருத்துவ தர சிலிக்கோனால் தயாரிக்கப்படுகின்றன. இவை அழுத்தம் மற்றும் அசைவுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விண்வெளிப் பயணத்திற்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாகும்.
ஆய்வக முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், நுண் ஈர்ப்பு நிலையில் (Zero Gravity) அவற்றைப் பயன்படுத்துவது குறித்து கூடுதல் களச் சோதனைகள் தேவைப்படுகின்றன. மென்சுரல் கப்கள் பயனுள்ளதுதான் என்று நிரூபிக்கப்பட்டால், அது விண்வெளி வீராங்கனைகளுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும்.
தற்போதைய வாய்ப்புகள்
இன்று, விண்வெளி வீராங்கனைகள் பொதுவாக ஹார்மோன் மூலம் மாதவிடாயை நிறுத்துவது (Hormonal Suppression) அல்லது தனிப்பட்ட மாதவிடாய் தயாரிப்புகளை எடுத்துச் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். டம்பான்கள் மற்றும் நாப்கின்கள் பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அவற்றைச் சேமித்து வைப்பதும், கழிவுகளை அகற்றுவதும் சவால்களாக இருக்கும். சிலர் வசதிக்காக மாதவிடாயை நிறுத்துவதையே தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் ஹார்மோன் ஆரோக்கியத்திற்காக இயற்கை மாதவிடாய் சுழற்சியைப் பரிந்துரைக்கின்றனர்.

