நேபாளத்தை போலவே பாகிஸ்தானும் இந்தியப் பகுதிகளை தனது எல்லைக்குள்  இணைத்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களை உரிமை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் வரைபடம் வெளியிட்டுள்ளது. இதில் ஜீனகத், மற்றும் குஜராத்தின் சர்க் ரீக்  ஆகிய பகுதிகளும் பாகிஸ்தானின் பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் அவை முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என இந்தியாவை எச்சரித்ததுடன்,  காஷ்மீரின் சுதந்திரம் பாறிக்கப்பட்டுவிட்டதாக கொந்தளித்தது. உடனே பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கூட காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம், இருநாடுகளும் சமாதானத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென கூறி விலகிக் கொண்டன.  அதைத்தொடர்ந்து சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா மன்றம் வரை கொண்டு சென்று, சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து அதிலும் தோல்வியை கண்டுள்ளது. இதனால் இந்தியா மீது வெறுப்பின் உச்சத்தில் உள்ள பாகிஸ்தான். இந்தியாவை  சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கி உள்ளது. 

இந்திய பகுதிகளை தனது எல்லைக்குள் இணைந்து புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதி என  சித்தரிக்கும் வகையில் அந்த வரைபடம் அமைந்துள்ளது.  அதாவது ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களை தனது எல்லைக்குள் இணைத்து இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தை அரசியல் முட்டாள்தனம் இன்று இந்தியா விமர்சித்துள்ளது. மேலும் இது போன்ற அபத்தமான கூற்றுகள் சட்டபூர்வமாக செல்லுபடியாகாது எனவும், இதில் துளி அளவும் சர்வதேச நம்பகத்தன்மை இல்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானின் இந்த அரசியல்  வரைபடத்தை பிரதமர் இம்ரான்கான்  வெளியிட்டுள்ளது அறிகிறோம். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் செய்யப்படும் அபத்தத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், இத்தகைய அபத்தமான நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமோ அல்லது சர்வதேச நம்பகத்தன்மையோ இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் எல்லை தாண்டிய  பயங்கரவாதம் மற்றும் எல்லை விரிவாக்கத்திற்கான முயற்சி என இந்தியா கண்டித்துள்ளது. 

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த வரைபடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவின் நகர்வை பொய்யாக்குகிறது. இந்த புதிய வரை படத்திற்கு தனது அமைச்சரவை மற்றும் முழு அரசியல்  தலைமையின் ஆதரவு கிடைத்துள்ளது.  இனி இந்த வரைபடம் பாகிஸ்தானின் அனைத்து அரசு   ஆவணங்களிலும் பயன்படுத்தப்படும். இனி ஐநா பாதுகாப்பு குழுவின் முடிவே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வாகும். இதற்காக பாகிஸ்தான் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை தொடரும் என கூறியுள்ளார்.  முன்னதாக இந்தியாவின் பகுதிகளை தனது நாட்டு வரைபடத்துடன் இணைத்து வெளியிட்ட நேபாளம்,  திருத்தப்பட்ட வரைபடத்தை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கூகிள் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிற சர்வதேச சமூகங்களுக்கும் அனுப்ப நேபாள அரசு தயாராகி வருகிறது. இதற்காக, 4 ஆயிரம் வரைபடங்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்படுகின்றன. நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு மே-மாதம் ஒப்புதல் அளித்தது. இதில், திபெத், சீனா மற்றும் நேபாளத்தின் எல்லையில் உள்ள இந்திய பிரதேசங்களான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்தின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.