வெள்ளை மாளிகையில் யாராவது வெளியேற மறுத்து ஒளிந்து கொண்டால் நாங்கள் கடற்படை சீல் கமாண்டோக்களை அனுப்பி அவர்களை விரட்ட வேண்டி இருக்கும் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.  அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதிபர் ட்ரம்பை எச்சரிக்கும் வகையில் அவர் இவ்வாறு மறைமுகமாக விமர்சித்துள்ளார்.இந்த விமர்சனம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கடந்த 3ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சுமார்  290 எலக்ட்ரோல் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை பெற்ற ஜோபிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரம் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெறும் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இன்னும் சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 14ம் தேதி ஓட்டெடுப்பு நடத்திய பிறகுதான் பிடன் 46 ஆவது அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். எதிர்பார்த்தபடி பிடன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் அவர் ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்பார். இது அமெரிக்க அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட தேதியாக உள்ளது. 

இந்நிலையில் ஜோபிடனின் வெற்றியை ஏற்க மறுத்துவரும் டிராம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாகவும் பிடிவாதமாக கூறி வருகிறார். தோல்வி அடைந்துவிட்டோம் என்று தெரிந்த பின்னரும் அவர் வெள்ளை மாளிகையில் தங்கி வருகிறார். அங்கு அவர் எப்போதும் போல சகஜமாக விளையாடி பொழுது கழித்து வருகிறார். அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான சட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் யு.எஸ் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்று அழைக்கப்படும் கூட்டாட்சி அமைப்பு தேர்தலில் ஆட்சியாளர்கள் யார் என்று குறிப்பிடும்போது அவர்கள் ஆட்சி மாற்றம் செய்வதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். உண்மையிலேயே அவர்  ஜனவரி 20-ம் தேதிக்கு பின்னரும் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தால் அவர் சட்டத்தை மீறுபவராக மாறிவிடுவார் என அமெரிக்க சட்ட வல்லுநர்கள் கூறிவருகின்றனர். 

அதற்கு பின்னரும் அவர் அடம்பிடித்தால் அவரை எப்படி வெளியேற்றுவது என்பது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜிம்மி கிம்மெல் லைவ்-வில் கலந்து கொண்டார். அப்போது அங்கு எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பல வேடிக்கையான கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒபாமாவிடம் சுவாரஸ்யமாக கேள்வி ஒன்றை எழுப்பினார், அதாவது தன்னை யாராவது பணிநீக்கம் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் ஒருவர் வெள்ளை மாளிகையில் யாரும் கண்டுபிடிக்காத வகையில் ஒளிந்துகொள்ள இடம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு  பராக் ஒபாமா சிரிப்புடன் பதிலளித்தார், " எங்கள் கடற்படையின் கமாண்டர் சீல்லை அனுப்புவதன் மூலம் அங்கு மறைந்திருக்கும் எவரையும் விரட்ட முடியும் என நினைக்கிறேன் என அவர் கூறினார். பிடனின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்து வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற மறுக்கும் ட்ரம்பையே மறைமுகமாக  இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார். 

அதே நேரத்தில் வெள்ளை  மாளிகையில் அதிகார பரிமாற்றம் எளிதாகவும், அமைதியுடனும் முடிவடையும் என தான் நம்புவதாகவும் ஒபாமா கூறினார். அதேபோல அமெரிக்காவின் அரசாங்கத்தை மாற்றுவது பொதுச்சேவை நிர்வாகத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறினார். ஆனால் நிர்வாகத்தை மாற்றும் விவகாரம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, இந்த அறிவிப்பு டிசம்பர்  14-க்கு பிறகு அறிவிக்கப்படும் என தான் நம்புவதாக கூறினார். அதாவது முன்னாள் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட "கடற்படை கமாண்டோ சீல்"  என்பது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக அளவில் பிரமிப்புடன் பார்க்கப்படும் ஆபத்தான கமாண்டோ பிரிவாகக் கருதப்படுகிறது. கடற்படை கமாண்டோ சீல், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை  பாகிஸ்தானின் அபோடாபாத்தில் 2011 மே -2 அன்று  படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.