உங்கள் செயல்பாடு ஊக்கமளிக்கிறது.. இஸ்ரோவை பார்த்து வியந்த நாசா!!
இஸ்ரோவின் சந்திராயன் 2 செயல்பாடுகளை பாராட்டியதுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் சிக்னல் இழந்தது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமில்லாது உலகம் முழுவதும் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
எனினும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரோவின் சாதனைக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் செயல்பாடுகள் தங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக தெரிவித்த நாசா வருங்காலத்தில் கோள்களை ஆய்வு செய்யும் பணிகளில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதே போன்று ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரோவின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் இஸ்ரோ மிகப்பெரிய சாதனையை செய்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.