இத்தாலியில் வானில் பறக்கும் தட்டு போன்ற சிவப்பு நிற ஒளி வளையம் தோன்றி பீதியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படக் கலைஞர் வால்டர் பினோட்டோ இந்த நிகழ்வைப் படம் பிடித்துள்ளார்.

இத்தாலியின் வடக்கு பகுதியில், ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள போசக்னோ (Possagno) என்ற சிறிய நகரின் வானில் சிவப்பு நிறத்தில் ஒளிரும் வளையம் (Halo of Red Light) தென்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, இதுபோன்ற வளையம் தோன்றியுள்ளது. இது ஒரு பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் இருப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய காட்சி

புகைப்படக் கலைஞர் வால்டர் பினோட்டோ (Valter Binotto), நவம்பர் 17 இரவு சுமார் 10:45 மணியளவில் இந்தக் காட்சியைப் படம்பிடித்தார்.

இந்த ஒளிரும் வளையம் சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் மிதந்ததாகவும், அதன் விட்டம் சுமார் 200 கிலோமீட்டர் இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 2023-ல் இதே போசக்னோ நகரில் பினோட்டோ கண்டறிந்த அதேபோன்ற சிவப்பு வளையத்தை இது ஒத்திருந்தது. சுமார் 2,200 மக்கள் வசிக்கும் இந்தச் சிறிய நகரத்தின் வானில் இரண்டாவது முறையாக இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.

வேற்றுகிரகவாசிகளின் வருகையா?

இந்த அசாதாரண ஒளிரும் வளையங்கள் வேற்றுகிரகவாசிகள் தொடர்பானவை இல்லை என்றும் இது 'ELVEs' என்று அழைக்கப்படும் ஒரு அரிய மின்னல் நிகழ்வாகும் என்றும் புகைப்படக் கலைஞர் பினோட்டோ கூறுகிறார்.

ELVE என்பது கீழ் அயனோஸ்பியரில் (Lower Ionosphere) உருவாகும் விரிவடையும் ஒளி வளையமாகும். இது பெரும்பாலும் பெரிய இடி மின்னல் புயல்களுக்கு இடையில் தோன்றும் என்றும் அவர் விளக்குகிறார்.

மின்னல் தாக்குதலில் இருந்து வெளியாகும் மின்காந்த துடிப்பு காரணமாக இது நிகழ்கிறது. இது மிகவும் குறுகிய காலமே நீடிக்கும். ஒரு மில்லி வினாடி மட்டுமே தோன்றும். இதனால், நவீன கருவிகள் இல்லாமல் இவற்றைப் பார்ப்பதும் விளக்குவதும் கடினம் என பினோட்டோ தெரிவித்துள்ளார்.

தற்காலிக ஒளிரும் நிகழ்வுகள் (TLEs)

நாசா (NASA) இந்த ஒளிரும் வளையங்களை 1990களில் முதன்முதலில் கண்டறிந்தது. நாசா இவற்றை தற்காலிக ஒளிரும் நிகழ்வுகள் (Transient Luminous Events) என வகைப்படுத்தி இருக்கிறது.

"TLEs என்பவை, இடி மின்னல் புயல்கள் மேகங்களுக்கு மேலே உருவாக்கும் மின்னலை விட வேகமான ஒளிக்கீற்றுக்கள் ஆகும். TLEகள் பல்வேறு வடிவங்களில், தோன்றலாம்" என்று நாசா விளக்குகிறது. ஸ்பிரைட்ஸ் (Sprites), ப்ளூ ஜெட்ஸ் (Blue Jets) மற்றும் ELVEs ஆகியவை TLE-யின் சில வகைகள் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒளிக்கீற்றுகள் மேல் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனுடன் வினை புரிவதால் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இருப்பினும், ஹைட்ரஜன் அதிகம் உள்ள வியாழன் (Jupiter) போன்ற கிரகங்களில், இவை நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் என்று நாசா கூறுகிறது.

2019ஆம் ஆண்டில், நாசாவின் ஜூனோ விண்கலத் தரவுகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், வியாழனின் மேல் வளிமண்டலத்தில் முதன்முறையாக TLEகள் இருப்பதை உறுதி செய்தனர்.