மகனை கொலை செய்த குற்றவாளியை கட்டித்தழுவிய தந்தை..! தலைவணங்கி மன்னிப்பு கேட்ட கொலையாளி..! நெகிழ்ச்சி சம்பவம்..!
தன் மகனைக் கொலை செய்துவிட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற குற்றவாளியை கொலை செய்யப்பட்டவரின் தந்தை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிட்சா டெலிவரி செய்துவிட்டு வரும்போது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து நடந்த விசாரணையில் ரெல்போர்ட் என்பவர், கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். எனவே ரெல்போர்ட் முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட நாளன்று சலாவூதினின் தந்தை அப்துல் முனிம் சோபத்தும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் பேசும்போது, ரெல்போர்ட் நான் உன்னை மன்னிக்கிறேன். எனக்கு உன் மீது கோபம் கிடையாது. உன்னைத் தவறாக வழி நடத்தி இந்தக் கொடூரமான குற்றத்தை செய்யத் தூண்டிய அந்த தீய சக்தியின் மீதுதான் எனக்கு கோபம் என்றார்.
மேலும் அவரது இருக்கையிலிருந்து எழுந்து நீதிபதியின் அனுமதியோடு ரெல்போர்ட்டை கட்டிப்பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார். இந்தக் காட்சியை கண்ட நீதிபதி, தனது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.
அப்துல் முனிமின் ஆறுதல் வார்த்தைகளால் தன்னை அறியாமல் ரெல்போர்ட்டின் கண்கள் கலங்கின. மகனை இழந்து தவிக்கும் அந்த தந்தையிடம் ரெல்போர்ட், தலைவணங்கி மன்னிப்பு கேட்டார்.
மகனை கொன்றவனை மன்னிப்பதாக கொலையாளியிடமே கட்டிப்பிடித்த தந்தை மற்றும் செய்த குற்றத்துக்கு தலைவணங்கி மன்னிப்பு கேட்ட குற்றவாளி ஆகிய இருவரின் செயலைக் கண்டு நீதிமன்றமே நெகிழ்ந்தது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.