ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில், நாடாளுமன்ற விவாதத்தின் போது, பெண் எம்.பி. ஒருவர், தனது 6 வார கைக் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசினார்.

ஐரோப்பாவில் பலநாடுகளில் பெண்கள் தாய்பால் கொடுப்பதை குறைத்து வரும் நிலையில், எம்.பி. ஒருவர் தாய்பால் கொடுத்துக்கொண்டே நாடாளுமன்றத்தில் பேசியது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, பாராட்டைப் பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஐரோப்பாவில் பெண் எம்.பி. ஒருவர் தனது குழந்தைக்கு பால்புகட்டிக்கொண்ட நாடாளுமன்றத்தில் பேசியது இது முதல்முறையாகும்.

6வார குழந்தை

ஐஸ்லாந்து நாட்டில் தேசிய சுதந்திரக்கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் பெண் எம்.பி. உன்னுர் பிரா கொன்ராட் டாட்டிர். இவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த மாதம் 3-வது குழந்தை பிறந்தது. தற்போது, 6 வாரங்களாகும் பச்சிளங்குழந்தையோடுதான் நாடாளுமன்றத்துக்கு கொன்ராட் டாட்டிர் வந்து செல்கிறார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற நீதிமன்ற விவகாரம் மற்றும் கல்விக்குழுவின் தலைவராகவும் கொன்ராட் டாட்டிர் இருந்து வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில்கொன்ராட் டாட்டிர் பங்ேகற்றார். அப்போது சபாநாயகர் கொன்ராட்டை பேச அழைத்தார்.

பால்புகட்டிக்கொண்டே பேச்சு

அந்தநேரத்தில், கொன்டாராட் தனது குழந்தைக்கு பால்புகட்டிக் கொண்டு இருந்தார். அருகில் இருந்த பெண் எம்.பி. குழந்தையை தாந் வைத்துக்கொள்வதாக கொன்ராட்டிம் கேட்டார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கொன்ராட், தனது குழந்தையை தொந்தரவு செய்யாமல், மார்பில் பால்புகட்டிக்கொண்டே நாடாளுமன்ற அவையில் பேசினார். கொன்ராட் பேசி முடியும் வரை, அவரின் குழந்தையும் எந்த விதமான அழுகையும் இல்லாமல் இருந்தது.

ஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றில் பெண் எம்.பி. ஒருவர் குழந்தைக்கு பால்புகட்டிக்கொண்டே பேசியது இதுதான் முதல்முறையாகும்.

இயற்கையானது

இது குறித்து எம்.பி. கொன்ராட் டாட்டிர் ஐஸ்லாந்து தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ எனது மகளுக்கு நான் பாலூட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம். எனது மகள் மிகவும் பசியோடு இருந்து, பால்குடித்துக்கொண்டு இருந்தாள். அவளை தொந்தரவு செய்தால் நிச்சயம் அழுதிருப்பாள்.

அதை செய்ய நான் விரும்பவில்லை. எனது மகள் பிறந்ததில் இருந்து என்னோடுதான் நாடாளுமன்றத்துக்கு வருகிறாள், கூட்டங்களில் பங்கேற்று வருகிறாள். என்னுடன் பல கூட்டங்களில் என் மகள் பங்கேற்று இருக்கிறாள். அப்போதெல்லாம் அமைதியாக இருப்பாள், நாங்கள் மசோதாவுக்கு வாக்களிக்கும்போதெல்லாம் நன்றாக தூங்குவாள்'' என்று தெரிவித்தார்.

சர்ச்சை..

பொது இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவது பல நாடுகளில் இன்னும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. உலகிலேயே தாய்பால்புகட்டும் பெண்கள் இங்கிலாந்தில் மிகக் குறைவாகும். அதிலும் நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் குழந்தைகளுக்கு பால்புகட்டுவது என்பது அனுமதிக்கப்படாது.

9மாதம்

ஆனால், ஐஸ்லாந்தில் ஒரு தம்பதி குழந்தை பெற்றால் ஒட்டுமொத்தமாக 9 மாதங்கள் பெற்றோருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும். அதாவது, 3 மாதம் தந்தைக்கும், 3 மாதம் தாய்க்கும், தேவைப்பட்டால் மீதமுள்ள மாதங்களை இருவரில் ஒருவர் எடுத்துக்கொள்ளமுடியும்.

அமெரிக்கா மோசம்

அதேசமயம், அமெரிக்காவில் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு பேருகால விடுப்பு என்பது நடைமுறையில் இல்லை. நாடாளு மன்றத்திலும் எம்.பி.கள் குழந்தையோடு வருவதற்கும், பால்புகட்டவும் அனுமதியில்லை.

இந்த ஆண்டு இறுதியில், நார்த் கரோலினா மாநிலத்தில் ஒரு நீதிமன்ற விசாரணையின் போது, ஒரு பெண் தனது குழந்தைக்கு பால்புகட்டிக்கொண்டே சாட்சி சொல்ல வந்தார். அப்போது, அவரை கடுமையாகக் கண்டித்த நீதிபதி, நீதிமன்றத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார்