அமெரிக்காவை உலுக்கி வரும் ‘மேத்யூ’ புயலுக்கு பயந்து புளோரியா, சவுத் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவசர நிலையை அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
கிரீபியன் நாடான ஹெய்தியை துவம்சம் செய்த மேத்யூ புயலால் அங்கு பலி எண்ணிக்கை 300 மேல் அதிகரிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
240.கி.மீ.வேகம்
கரீபியன் கடலில் உருவான சக்திவாய்ந்த புயலுக்கு ‘மேத்யூ’ என பெயரிடப்பட்டது. கர்பீயன் கடலில் இருந்து வடக்கு அட்லாண்டின் வழியாக பாகாமாஸ், கியூபா, ஹெய்தி நாடுகளை தாக்கி ருத்ர தாண்டவம் ஆடியது. மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று, பலத்த மழையால் ஹெய்தியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர் என அரசு தெரிவித்தபோதிலும், அங்கு பலி 300-க்கும்மேல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

அவசர நிலை
அங்கு தாண்டவமாடிய மேத்யூ புயல், வடக்கு அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவின் புளோரிடா, சவுத் கரோலினா நகரை வியாழக்கிழமை இரவு முதல் தாக்கத் தொடங்கி இருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற கடுமையாக புயலை அந்த மக்களும், அரசும் எதிர்கொள்ளவில்லை என்பதால், புளோரிடா, சவுத் கரோலினா மாநிலங்களில் அவசர நிலையை அதிபர் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். அங்கு வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
20 லட்சம் பேர்
இதுவரை இருமாநிலங்களிலும் சேர்த்து ஏறக்குறைய 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். மேத்யூ புயல் புளோரிடாவில் இருந்து, போர்ட் லாடர்டேல், மியாமி ஆகிய பகுதிகளில் மழையும், காற்றும் வெளுத்து வாங்கி வருகிறது.
சாலைகளில் மழைநீர் ஓடுவதால், பல இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை, பலத்த காற்று காரணமாக பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

3 ஆயிரம் விமானங்கள்
இது குறித்து தேசிய புயல் மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ மேத்யூ புயல் மெல்ல புளோரிடாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து சவுத்கரோலினா, ஜியோர்ஜியா பகுதியைத் தாக்கும், இதனால் ஓர்லாண்டோ, போர்ட் லாடர் டேல், தி பாம் பீச் ஆகிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களில் மட்டும் 3 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன '' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா கவர்னர் ரிக் ஸ்கார்ட் கூறுகையில், “ மேத்யூ புயல் ஏற்கனவே பல உயிர்களை பலி வாங்கி வந்துள்ளது. அதே போல், புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்'' எனத் தெரிவித்தார்.
