அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மேத்யூ புயல் தாக்கியதில் ஹைதி நாட்டில் பலி எண்ணிக்கை 842 என உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா, ஜார்ஜியா, சவுத் கரோலினா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கரீபியன் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்ட மேத்யூ புயல் கடந்த 3 நாட்களில் ஹைதி, ஜமைக்கா, கியூபா, பகாமா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹைதியில்தான் மேத்யூ புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு இது வரை புயல், மழையால் பலியின் எண்ணிக்கை 842 என உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.

தற்போது மேத்யூ புயல் அமெரிக்க கடலோர பகுதியை தாக்கத் தொடங்கியுள்ளது. புளோரிடா மாகாணத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு மேத்யூ புயல் தாக்கியது. அங்கு வரலாறு காணாத வகையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசியது.

மணிக்கு 130 மைல் வேகத்தில் வீசிய மேத்யூ புயலால், கடற்கரை பகுதிகளில் 11 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்தன. 90 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புளோரிடா, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் சுமார் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தனர். மேத்யூ புயலில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன, ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டன.

மேத்யூ புயல் பற்றி கருத்து தெரிவித்த புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் ‘‘இது ராட்சத புயல். இதில் எல்லோரும் பிழைக்க வேண்டும் என விரும்புகிறேன். இடிந்த வீடுகளையும், தொழிலையும் மீண்டும் உருவாக்கி விடலாம். ஆனால் ஒருவருடைய வாழ்வை நாம் உருவாக்க முடியாது’’ என்றார். 

மேத்யூ புயல் காரணமாக, புளோரிடா, ஜார்ஜியா, மற்றும் சவுத் கரோலினா ஆகிய மாகாணங்களில் அவசர நிலையை அதிபர் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். புளோரிடாவை தொடர்ந்து மேத்யூ புயல் தென் மற்றும் வட கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடந்த 3 நாட்களில் அமெரிக்காவில் 3,800 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.