மாஸ்கோவில்  நேற்று நள்ளிரவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் எடுத்த அலறல் வீடியோ சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் இன்று புறப்பட்ட ஏரோஃபுளோட் (Aeroflot) நிறுவனத்தின் சூப்பர் ஜெட் (Sukhoi Superjet-100) விமானத்தில் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 

அவசர அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே விமானத்தைத் தரையிறக்கினார் விமானி. இறங்கி ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது. விமானம் நிறுத்தப்பட்டு அவசர கால வழியில் பயணிகள் சிலர் தப்பித்தனர். அவர்கள் அலறியபடி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி யுள்ளன. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் காயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பற்றி எரியும் விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில் ஜன்னலுக்கு வெளியே தீ மளமளவென பற்றி எரிவதும், பெண்கள் உள்ளிட்ட பயணிகளின் அலறல் சத்தமும் கேட்கிறது. நெஞ்சம் பதை பதைக்க வைக்கும் இந்த வீடி யோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்துவிட்டதாக ஏரோஃபிளாட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது."பயணிகளை காப்பாற்ற விமானக் குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பயணிகள் 55 நொடிகளில் வெளியேற்றப்பட்டனர்". என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.