நீதிமன்றத்துக்குள் நீதிபதி மீது பாய்ந்து தாக்கிய நபர்: வைரல் வீடியோ!
அமெரிக்க நீதிமன்றத்துக்குள் வழக்கு விசாரணையின்போது, நீதிபதி மீது பாய்ந்த ஒருவர் அவரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது
அமெரிக்காவின் நெவாடா மாகாணம் கிளாக் கவுண்டி நீமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிபதி மேரி கே ஹோல்தஸ் முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட டெலோன் ரெட்டன் என்பவர், சிறைக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கும் நன்னடத்தை காலத்தை கோரியுள்ளார்.
ஆனால், குற்றவியல் வரலாற்றைக் காரணம் காட்டி அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த டெலோன் ரெட்டன், வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்ற அறைக்குள்ளேயே நீதிபதி மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகளில் அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீதிபதியை தாக்க அவர் அமர்ந்திருக்கும் பெஞ்ச் மீது தாவும் டெலோன் ரெட்டன் நீதிபதியை பலமுறை குத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதலில் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் மற்றும் மார்ஷல் ஒருவரும் காயமடைந்துள்ளனர். ஆனால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல நீதிபதி மறுத்துவிட்டார். இருப்பினும், காயமடைந்த மார்ஷல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்குள் வழக்கு விசாரணையின்போது, நீதிபதி மீது பாய்ந்த ஒருவர் நீதிபதியையே தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாக்கிய நபரை கட்டுக்குள் கொண்டு வந்த நீதிபதியின் ஊழியர்கள், காவல் அதிகாரிகள் என அனைவரது வீரச்செயல்களையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. பாதுகாப்பான நீதிமன்ற வளாகம் என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும். நாங்கள் எங்கள் அனைத்து நெறிமுறைகளையும் மதிப்பாய்வு செய்து வருகிறோம், நீதித்துறை, பொதுமக்கள் மற்றும் எங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை 2024: மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு!
இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான நீதிபதி மற்றும் தாக்குதலை நடத்திய டெலோன் ரெட்டனின் வழக்கறிஞர் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையே, நீதிமன்றத்துக்குள் நடந்த இந்த குற்ற சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக லாஸ் வேகாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.