பொங்கல் பண்டிகை 2024: மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாரம்பரியமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். எனவே, அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா அல்லது வழக்கமான இடத்திலேயே போட்டிகள் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: சீமான் வலியுறுத்தல்!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாரம்பரியமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதால் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.